கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஒரு வார்டில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது.
ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து ஆம் ஆத்மி என்ற இயக்கத்தை தொடங்கிய அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பெருவெற்றியைப் பெற்று இரண்டாவது முறையாக ஆட்சி நடத்துகிறார். அந்த சிறப்பான ஆட்சிக்கு பரிசாக பக்கத்து மாநிலமான பஞ்சாப்பிலும் அந்த கட்சிக்கு மக்கள் ஆதரவளித்தார்கள். அங்கும் தற்போது ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வருகிறது.
கோவா மற்றும் குஜராத் மாநில தேர்தலில் போட்டியிட்டு அங்கும் மக்கள் பிரதிநிதிகளை ஆம் ஆத்மி பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தற்போது கேரளாவிலும் தனது வெற்றிக் கணக்கை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 33 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் 17 வார்டுகளில் காங்கிரஸ் கூட்டணியும், 10 வார்டுகளில் இடதுசாரி கூட்டணியும், 4 வார்டுகளில் பாஜவும் வெற்றி பெற்றது.
எஸ்டிபிஐ மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தலா ஒரு வார்டை கைப்பற்றின. இடுக்கி மாவட்டத்திலுள்ள கரிங்குன்னம் பஞ்சாயத்தில் 7வது வார்டில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பீனா குரியன் வெற்றி பெற்றார். இந்த வார்டு காங்கிரசின் வசம் இருந்தது. இந்த வெற்றியின் மூலம் கேரளாவில் ஆம் ஆத்மி கட்சி தங்களுடைய வெற்றிக் கணக்கைத் தொடங்கியுள்ளது.
+ There are no comments
Add yours