தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் கால் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏரவல்லியில் அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த கேசிஆர் நேற்றிரவு கீழே விழுந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து அவர் ஹைதராபாத் யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் அவருக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், கே.சி.ஆரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு இடது இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், இது ஆறு முதல் எட்டு வாரங்களில் குணமடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மருத்துவமனை அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆருக்கு காயம் ஏற்பட்டுள்ளதை அறிந்து மனவேதனை அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க நான் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து தனி தெலங்கானா உருவானதற்கு காங்கிரஸே காரணம். ஆனால், மாநிலம் உதயமானது முதற்கொண்டு, பி.ஆர்.எஸ் கட்சியின் சந்திரசேகர ராவ் 2 முறை முதல்வராக பதவி வகித்தார். இதனை தொடர்ந்து தெலங்கானாவின் 3-வது சட்டப்பேரவை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி நடைபெற்றது. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.
இத்தேர்தலில், காங்கிரஸ் 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும், எம்.ஐ.எம் கட்சி 7 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் தான் போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி நேற்று முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அதற்கு முன்னதாக கேசிஆர் தனது முதல்வர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours