புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இயற்பியல் துறை, புவி அறிவியல் துறை அரங்கில் சிறப்பு கருத் தரங்கம் நடந்தது. இயற்பியல் துறை இணை பேராசிரியர் கோகுல்ராஜ் வரவேற்றார். பேராசிரியர் கிளமெண்ட் சகாயராஜா லூர்து தலைமை வகித்தார்.
சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் சிறப்பு விருந்தி னராக பங்கேற்றார். சந்திரயான் 3 வெற்றிகரமான ஏவுதல், பயணத்தின் பாதை, நிலவில் சந்திரயான் தரை இறங்கிய நிகழ்வு, நிலவில் ரோவரின் பங்கு குறித்து விளக்கினார்.
அப்போது அவர் பேசுகையில், “சந்திரனின் மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்தை செய்து, சந்திரனில் ரோவர் சென்று அங்கு வாய்ப்புள்ள அறிவியல் பரிசோதனைகளை நடத்துவதே சந்திரயான் திட்டத்தின் நோக்கமாகும்.
முதன்முதலில் தென் துருவத்தில் இறங்கியது, சில மைக்ரோசெகண்டுகள் கூட வித்தியாசம் இருந்திருந்தால் கடுமையான சேதம் ஏற்பட்டிருக்கலாம். அது தவிர்க்கப்பட்டது.
அனைத்து மின்சார, மின்னணு மற்றும் இயந்திர பாகங்களுக்கும் எந்த சேதமும் ஏற்படாமல் இந்த விண்கலம் இயங்கியது. வெறும் 14 நாட்கள் மட்டுமே இது செயல்படும். அதன் பிறகு ஓய்வு நிலைக்கு செல்லும். இந்த அமைப்புகள் மிகவும் குறைந்த வெப்பநிலையில் செயல்படும். நாடு முழுவதும் உள்ள பல ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்புடன் அவை அமைக்கப்பட்டன.
நமது ஆய்வின் தொடர்ச்சியாக, எதிர்காலத்தில் விண்வெளிக்கும், சந்திரனுக்கும் இந்தியர்கள் செல்வது சாத்தியமாகும், இது விண்வெளி அறிவியலில் ஒரு முக்கிய அறிவியல் முன்னேற்றமாக அமையும்” என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் இயற்பியல், வேதியியல், புவி அறிவியல் மாணவர்கள், முதுகலை, இளங்கலை, ஆராய்ச்சி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு கருத்தரங்க ஏற்பாடுகளை இயற்பியல் துறை தலைவர் சிவக்குமார் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
+ There are no comments
Add yours