ஜார்க்கண்ட் மாநில முதல்வராக சம்பய் சோரன் இன்று பதவியேற்க உள்ளார். ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக செயல்பட்டு வந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அக்கட்சியின் அமைச்சர் சம்பய் சோரன், முதல்வராக பொறுப்பேற்க அம்மாநில ஆளுநரை சந்தித்து புதன்கிழமை அன்று உரிமை கோரினார். இருந்தும் ஆளுநர் தரப்பில் இருந்து ஆட்சி அமைக்க அழைப்பு வராத சூழலில் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒரே இடத்தில் குழுமி இருந்தனர்.
வீடியோ மூலம் சம்பய் சோரன், முதல்வராக பொறுப்பேற்க 43 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு வழங்கினர். இருந்தும் ஆளுநர் தரப்பில் ஆட்சி அமைக்க அழைப்பு வராத சூழலில் அது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வராக சம்பய் சோரன் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
அதையடுத்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) ஜார்க்கண்ட் மாநில முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்க உள்ளார். அடுத்த 10 நாட்களுக்குள் அவரது தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ளது. அதில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தகவல். இதனை அம்மாநில காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் ஆலம்கிர் ஆலம் உறுதி செய்துள்ளார்.
+ There are no comments
Add yours