சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் சிறையிலிருந்து தனது முதல் உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை விடுதலை செய்யக்கோரி ஆம் ஆத்மி கட்சியினர் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று ஐடிஓ மேம்பாலத்தின் மீது ஏறி ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அணியினர் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் தொடர்ந்து முதலமைச்சராக பொறுப்பு வகிப்பார் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் படி முதலமைச்சர் இருக்கும் எந்த இடத்தையும் முதல்வரின் முகாம் அலுவலகமாக மாற்றிக்கொள்ள முடியும். அதேபோல் சிறை விதிமுறைகளின்படி முதலமைச்சரின் அலுவலகத்தில் அவரை வீட்டுச் சிறை வைக்கவும் முடியும். எனவே, இந்த சட்ட முன் வடிவுகளை முன்வைத்து தற்போது ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லி அரசை நடத்த முடிவு செய்துள்ளனர்.
தற்போது திகார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், நேற்று நீர்வளத் துறை அமைச்சர் அதிஷிக்கு, துறை ரீதியான அறிவுறுத்தல் ஒன்றை சிறையில் இருந்தபடியே வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சிறை விதிகளுக்கு உட்பட்டு ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர், கூட்டங்களை நடத்த முடியும். இதனால் தொடர்ந்து கேஜ்ரிவால், அரசை சிறையில் இருந்து நடத்த முடியுமா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
+ There are no comments
Add yours