முதல்வர் ரங்கசாமி காலையில் ஆய்வு செய்த அதே இடத்தில் மாலையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை ஆய்வு செய்தார். நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கனமழை காரணமாக மழைநீர் தேங்கி உள்ள பாவாணர் நகர் உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் ரங்கசாமி நேற்று காலை ஆய்வு செய்தார். அதே பகுதியை துணை நிலை ஆளுநர் தமிழிசை நேற்று மாலை பார்வையிட்டார். பொது மக்களின் புகார்களை கேட்டறிந்தார். அவருடன் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ சிவசங்கரன், உள்ளாட்சித் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் துணை நிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், “கழிவு நீர்க் கால்வாயில் மழை நீர் கலந்து மக்கள் வசிக்கும் தெருக்களில் சென்றுள்ளது. எம்எல்ஏ சிவசங்கரன் இந்த இடத்தில் இருந்து என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டார். பாலித்தீன் பைகள் “கழிவுநீர் செல்லும் பாலங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டதால் அந்த சாக்கடை நிரம்பி வெளியே வழிந்து கொண்டிருக்கிறது. உடனே அதனை அப்புறப் படுத்துமாறு ஆணையரிடம் கூறியிருக்கிறேன். கருப்பு நிற எண்ணெய் கலந்த கழிவுகளும் தெருக்களில் நிரம்பி உள்ளதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள்.
அதை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முட்டி அளவுஇருந்த தண்ணீர் மோட்டார் வைத்து இரைத்து வெளியேற்றப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக தலைமை செயலரிடம் பேசி இருந்தேன். அனைத்து இடங்களிலும் மக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கான முயற்சிகள் எடுக்கப் பட்டு வருகின்றன. எத்தகைய சிக்கல்கள் வந்தாலும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இதன் அடிப்படையில் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டு இருக்கிறது. நிர்வாகம் மக்களுக்கான அத்தனை உதவிகளையும் செய்து வருகிறது. கழிவு நீர் செல்வதற்கு ரூ. 56 கோடியில் பாதாள வடிகால் கட்டமைப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்திலும் இது போன்ற வடிகாலுக்கான திட்டங்கள் இருக்கிறன்றன. எனவே இது விரைவில் சரி செய்யப்படும். 3 கால்வாயில் இணைப்பு மற்றும் கழிவு நீர் வடிகால் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகளாகவே அதற்கான திட்டங்கள் மேற்கொள் ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவாக அதற்கான பணிகள் முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார்.
பின்னர் நேற்று இரவு ராஜ் நிவாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பாவாணர் நகர் உள்ளிட்ட பகுதிகளை ஆளுநர் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவின் படி, ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களின் உதவி யோடு கழிவு நீர் கால்வாய் துவாரப்பட்டு தெருக்கள் சுத்தம் செய்யப் பட்டன. சுகாதாரச் சீர்கேடு உருவாகாமல் இருக்க மருந்துகள் தெளிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
+ There are no comments
Add yours