டிசம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் இயல்பைவிட குறைந்த குளிரும், ஒருசில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக மழையும் பதிவாகலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் நேற்று (வெள்ளி) செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்தஞ்சய் மொஹபத்ரா இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், “வடக்கு, வடமேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் குளிர் அலைகள் ஏற்படுவது இந்த காலகட்டத்தில் இயல்பைவிட குறைவாகவே இருக்கும். அதேபோல் நாடு முழுவதுமே பரவலாக டிசம்பர் மாதத்துக்கான சராசரி வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.
மழையைப் பொருத்தவரை, வழக்கத்தைவிட சற்று அதிகமான அளவில் இந்த காலகட்டத்தில் மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2023-ல் வடமேற்கு, மத்திய, கிழக்கு இந்தியாவிலும் தென் இந்தியாவின் சில பகுதிகளிலும் மழையளவு வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். வடகிழக்கு, வடக்கு, மத்திய இந்தியாவை ஒட்டிய சில பகுதிகளில் வழக்கத்தைவிட குறைவாகவே மழையளவு இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக நவ.30 அன்று ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 அறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டிசம்பரில் இந்தியாவின் சராசரி வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இவை போன்ற ஒவ்வொரு கணிப்புகளும் தான் காலநிலை மாற்றத்தைத் தடுக்க வேண்டிய கட்டாயத்தை நமக்கு எச்சரிக்கையாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
கவனம் பெறும் காலநிலை உச்சி மாநாடு: ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வருகிறது. Conference of the Parties என்பது 1992-ம் ஆண்டு ஐ.நா சபையில் காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் உச்சி மாநாட்டை குறிப்பதாகும். துபாயில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா சபையின் 28-வது உச்சி மாநாடு COP28 என அழைக்கப்படுகிறது. நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 12-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் கலந்து கொள்கின்றன. புவி வெப்ப நிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கை எட்டுவது குறித்து ஆராய்வதை இந்த உச்சி மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
+ There are no comments
Add yours