டெல்லியில் காங்கிரஸுக்கு ஒரு தொகுதி தான் வழங்க முடியும் என ஆம் ஆத்மி கட்சி கூறியதால் அதிர்ச்சியடைந்த ராகுல் காந்தி, கேஜ்ரிவாலை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் முறையே திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டுவிட்டு தனித்துப் போட்டியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தன. பீகாரிலும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து விலகி, பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டது.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதிதான் ஒதுக்கப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்தது. இதனால், காங்கிரஸ் மீண்டும் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி- ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
காங்கிரஸுக்கு ஒரு தொகுதி ஒதுக்கும் ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி முடிவானது இந்தியா கூட்டணியை தடம் புரளச் செய்துவிடும். இதனை உணர்ந்த ராகுல் காந்தி, கேஜ்ரிவாலை போனில் தொடர்புகொண்டு பேசியதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தையின்போது, தொகுதி பங்கீடு தொடர்பான இழுபறிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என ராகுல் கேஜ்ரிவாலிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதேபோல், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட தாமதம் குறித்தும், அதற்கான காலம் முடிந்துவிட்டது என்றும் இந்த பேச்சுவார்த்தையின்போது கேஜ்ரிவால் ராகுலிடம் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
+ There are no comments
Add yours