எதிர்க்கட்சியினரின் ஐபோன்கள் ஹேக் செய்யப்படுவதாக எழுந்த சர்ச்சையில், ‘தவறு செய்பவர்களை மத்திய அரசே தன் பக்கம் வைத்துள்ளது’ என மூத்த வழக்கறிஞரும், மக்களவை உறுப்பினருமான கபில் சிபல் காட்டம் தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா, சிவசேனா(உத்தவ்) கட்சியின் பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மியின் ராகவ் சதா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் ஒவைசி, காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் உட்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் பலரின் ஐபோன்கள் ஹேக் செய்யப்படுவதாக திடீர் சர்ச்சை எழுந்தது.
அரசு ஆதரவிலான சிலர் இந்த ஹேக்கிங்கில் ஈடுபடுவதாகவும், ஐபோன் வாடிக்கையாளர்களான எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை தகவல் அனுப்பியிருந்தது. இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர்களின் ஐபோன்கள் ஒட்டுக்கேட்புக்கு ஆளாவதாக பாஜக அரசு மீது எதிர்க்கட்சி எம்பிக்கள் புகார் கணைகளை தொடுத்தனர்.
இதனை மத்திய அரசு கடுமையாக மறுத்தது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ், “ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை இந்தியாவுக்கு மட்டுமானதல்ல. உலகம் முழுவதும் 150 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, மதிப்பீடு அடிப்படையில் இந்த எச்சரிக்கையை ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ளது. குறிப்பிடும்படியான தகவல் அவர்களிடம் இல்லை என்பதும் அவர்கள் அனுப்பிய இ மெயிலில் தெரிகிறது. எனினும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளோம்” என விளக்கமளித்தார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மக்களவை உறுப்பினர் கபில் சிபல், “தவறு செய்பவர்களை மத்திய அரசே தன் பக்கம் வைத்துள்ளது. பின்னர் அவர்கள் ஏன் எதிர்க்கட்சிகளைப் பற்றிப் பேச வேண்டும். பாஜக ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து அரசியலமைப்புக்கு முரணான செயல்களையே செய்து வருகிறது. பாஜகவைச் சேர்ந்தவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிலர் ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள். அரசியலமைப்பை மோடி அரசு தவறாகப் பயன்படுத்துகிறது” என்று பாஜகவுக்கு எதிராக சீறி உள்ளார்.
+ There are no comments
Add yours