திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் !

Spread the love

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எந்நாளுமே பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் உற்சவ நாட்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்நிலையில் வெள்ளிக்கிழமை குடியரசு தினம் மற்றும் சனி மற்றும் ஞாயிறு வழக்கமான விடுமுறை என்பதால் கடந்த 3 நாட்களாக திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலை மோதி வருகிறது.

இதனால் திருமலை மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாக காணப்படுகிறது. வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட தெலுங்கு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை 71,664 பேர் சாமி தரிசனம் செய்தனர். ஏழுமலையானுக்கு காணிக்கையாக 3.37 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை பெறப்பட்டது.

நேற்று சனிக்கிழமை என்பதால் ஏழுமலையானை தரிசனம் செய்ய அதிகளவு பக்தர்கள் திருமலைக்கு வருகை புரிந்தனர். தரசனத்திற்கு 18 மணி நேரத்திற்கு மேல் ஆனது. வைகுந்தம் கியூ வளாகத்தின் அனைத்து பெட்டிகளும் பக்தர்களால் நிரம்பி வழிந்தன. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸையும் தாண்டி வெளியில் பக்தர்கள் வரிசையில் நின்றனர்.

வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் உணவு குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கி வந்தனர். பக்தர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வைகுண்டம்-2ல் உள்ள 33 பெட்டிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று மட்டும் ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்யும் வகையில் தேவஸ்தான நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

பக்தர்களின் கூட்டத்தால் சுமார் 4 கிலோ மீட்டர் வரை காத்திருப்பு வரிசை நீண்டிருந்தது. நாராயணகிரி கொட்டகைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இன்று பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஸ்ரீவாரி தரிசனத்திற்காக வைகுண்டம் காம்ப்ளக்ஸையும் தாண்டி பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிருஷ்ண தேஜா விருந்தினர் மாளிகை வரை வெளியே வரிசை உள்ளது. அதுவரையிலும் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

டோக்கன் இல்லாமல் காலை 7 மணிக்கு சர்வதர்ஷன் வரிசையில் நுழைந்த பக்தர்கள் 24 மணி நேரமும் தரிசனம் செய்வார்கள் என தெரிகிறது. இன்றும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
திருப்பதி ஏழுமலையானை நேற்று 76,104 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் 32,412 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். நேற்று உண்டியல் வருமானமாக 2.92 கோடி ரூபாய் வசூலானது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours