திருப்பதி மலைப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள ‘டிராப் கேமரா’க்களில் மீண்டும் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்
திருப்பதியில் இருந்து திருமலைக்கு அலிபிரி அல்லது ஸ்ரீவாரி மெட்டு மார்க்கமாக நடந்து மலையேறி செல்லும் பக்தர்களை சிறுத்தைகள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சிறுவனை கடித்து இழுத்து சென்ற சிறுத்தையை பக்தர்கள் விரட்டி அடித்தனர். எனவே அந்த சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு சென்றது, இதனால் சிறுவன் உயிர் பிழைத்தான்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தேவஸ்தானம் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்காத காரணத்தினால், அதன்பின்னர் லக்ஷிதா எனும் 6 வயது சிறுமியை சிறுத்தை அடித்து கொன்றது. இந்த சம்பவத்துக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம் என்று பக்தர்கள் வெகுவாக கண்டித்தனர். இதனை தொடர்ந்து, பக்தர்கள் கூட்டம் கூட்டமாக திருமலைக்கு அனுப்ப பட்டனர். 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அலிபிரி மார்க்கத்தில் 7-வது மைல் பகுதியில் இருந்து லட்சுமி நரசிம்மர் கோயில் வரை சுமார் 500க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிறுத்தை, கரடி நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டன. இதனால்7 சிறுத்தைகளை தேவஸ்தானத்தினர் கூண்டு வைத்து பிடித்து, திருப்பதி வனப்பூங்காவில் ஒப்படைத்தனர்.
ஆனாலும் கூட அவ்வப்போது சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதால், பக்தர்கள் இரவு நேரங்களில் மிகவும் ஜாக்கிரதையாக கூட்டம் கூட்டமாகத்தான் செல்ல வேண்டுமென தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்ததோடு, பக்தர்களின் பாதுகாப்புக்கு பிரம்பு ஒன்றையும் கையில் கொடுத்து அனுப்பியது. இதற்கு கண்டனம் தெரிவித்து, சிறுத்தையை விரட்ட பிரம்பா என எதிர்க்கட்சியினரும் விமர்சித்தனர்.
இந்நிலையில், கடந்த 13-ம்தேதி மற்றும் 26-ம் தேதிகளில் மலைப்பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள ‘டிராப் கேமரா’க்களில் சிறுத்தை மற்றும் கரடி நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. ஆதலால், பக்தர்கள் மிகவும் ஜாக்கிரதையாக தக்க பாதுகாப்புடன் மலையேறி செல்ல வேண்டுமென தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. புத்தாண்டு மற்றும் பண்டிகை காலம் வரவுள்ள நிலையில் எண்ணற்ற பக்தர்கள் திருப்பதிக்கு வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த சூழலில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையால் பதற்றமான சூழல் நிலவுகிறது. நடந்து செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவஸ்தான் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
+ There are no comments
Add yours