தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு!

Spread the love

ஹைதராபாத்: தெலங்கானா முதல்வராக காங்கிரஸ் மாநில தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி வியாழக்கிழமை பதவியேற்றார். துணை முதல்வராக பத்தி விக்ரமார்கா பதவியேற்றுக் கொண்டார். இவர்களுடன் தாமோதர் ராஜா நரசிம்மா, உத்தம் குமார் ரெட்டி, கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி, சீதாக்கா, பொன்னம் பிரபாகர், ஸ்ரீதர் பாபு, தும்மலா நாகேஷ்வர ராவ், கொண்ட சுரேக்கா, ஜுபால்லி மற்றும் கிருஷ்ணா பொங்குலிடி ஆகிய 10 பேரும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

ஹைதராபாத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் ரேவந்த் ரெட்டி மற்றும் அமைச்சர்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தெலங்கானா சட்டப்பேரவை பலத்தின்படி, முதல்வர் உட்பட 18 பேர் அமைச்சரவையில் இடம்பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா, வயநாடு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கர்நாடகா முதல்வர சித்தராம்மையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி வாழ்த்து: தெலங்கானா முதல்வராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “தெலங்கானா முதல்வராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்துகள். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் தேவையான அனைத்து சாத்தியமான உதவிகளையும் வழங்குவேன் என நான் உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு தெலங்கானா மாநிலம் உருவானதில் இருந்து அங்கு முதல்வராக இருந்த கே.சந்திரசேகரராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி அரசு ஆட்சியில் இருந்தது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் 65 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று கேசிஆரிடமிருந்து ஆட்சியை தட்டிப்பறித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் தன் பொது வாழ்க்கையைத் தொடங்கிய ரேவந்த் ரெட்டி, பிறகு தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியில், அதாவது இப்போது உள்ள பாரத் ராஷ்ட்ர சமிதியில் இணைந்தார். பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து, இப்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours