தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Spread the love

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கடமையாற்றுவதற்கான உடற் தகுதியை பெற்றிருக்கிறாரா என கேட்க முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் போது, சொத்து விவரம், குற்ற வழக்குகள் பற்றிய தகவல்களை ஆகியவற்றை வேட்பாளர்கள் தாக்கல் செய்து வருகின்றனர். இத்துடன் 30 நாட்களுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு அறிவுறுத்த, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி கோவையைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர் 2016ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜரானார். அப்போது,”வேட்பாளர்களின் உடல் நிலை குறித்து பரிசோதனை அறிக்கை என்பது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம் என்பதால், அந்த விவரங்களை கேட்க முடியாது. மேலும், இதுசம்பந்தமாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டுமானால், அதுகுறித்து சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புருஷோத்தமன், “தான் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதியின் உடல் நிலையை தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது. மருத்துவ காப்பீடு பெற மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை அளிக்கும் நிலையில், வேட்பாளர்களுக்கு ஏன் வலியுறுத்தக் கூடாது” என வாதிட்டார்.

இதையடுத்து, வேட்பாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றி தெரிவிக்கும்படி வற்புறுத்த முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் “அரசியல் சாசன பதவிகளை வகிப்பவர்கள், உடற்தகுதி சான்று சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கடமையாற்றுவதற்கான உடற்தகுதியைப் பெற்றிருக்கிறார்களா என்பது குறித்த சான்றை பெறலாம்” என யோசனை தெரிவித்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours