மத்திய பிரதேச மாநிலம், மாண்ட்லா மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர், மாரடைப்பால் உயிரிழந்தார்.
மத்திய பிரதேச மாநிலம், மாண்ட்லா மாவட்டத்தில் பழங்குடியினர் துறையில் அரசு ஊழியராக பணிபுரிந்தவர் மணிராம் கன்வ்ரே (40). மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இவருக்கு மாண்ட்லா (எஸ்டி) மக்களவைத் தொகுதியில் உள்ள பிச்சியாவுக்கு தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இங்கு முதல் கட்ட வாக்குப்பதிவு தினமான நாளை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் மாண்ட்லாவில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்தல் தொடர்பான பொருட்களை பெற்றுக்கொண்டு, வாக்குச் சாவடிக்கு சென்று கொண்டிருந்தார் மணிராம்.
அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் இருந்த சக அலுவலர்கள் மணிராமை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மணிராம் மரணம் துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ள மத்தியப் பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி அனுபம்ராஜன், இது தொடர்பாக போபாலில் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், “மணிராம் கன்வ்ரே உறவினர்களுக்கு எனது இரங்கல். அவரது குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும்.
மேலும், கன்வ்ரேயின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாண்ட்லாவில் உள்ள பழங்குடியினர் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.” என்றார்.
+ There are no comments
Add yours