ஜனவரி 24 பெண் குழந்தைகளுக்கான தினமாக கடந்த 2008-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்ட இந்த நாள் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளுக்கு நேரும் பிரச்னைகளைத் தடுக்கவும், பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்யவும், சமூகத்தில் அவர்களுக்கான சம உரிமையை அளிக்கவுமே இந்த நாள் கொண்டு வரப்பட்டது.
மேலும் பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஜனவரி 21 தொடங்கி 26-ம் நாள் வரை பள்ளிகளில் பெண் குழந்தைகளின் கல்வி குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த சில போட்டிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் அடங்கிய பதாகைகளை ஏந்திய ஊர்வலம், தற்காப்புக் கலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மரம் நடுதல் என பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த வருடம்’ பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ’ (beti bachao beti padhao (BBBP) ) திட்டத்தின் நான்காம் ஆண்டை ஊக்குவிக்கும் விதமாக இன்று அது குறித்த விழிப்புணர்வுகள் பரப்பப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு பெண் குழந்தைகள் தினத்தில் மோடி “ பெண் குழந்தைகளின் திறமை, சாதனைகள், மனோபலம், தைரியத்தைக் கண்டு தலை வணங்குகிறேன். எல்லா துறைகளிலும் பெண் குழந்தைகள் காணும் வெற்றிகளைக் கண்டு பெருமைப்படுகிறேன்” எனக் கூறினார்.
”தேசிய பெண் குழந்தைகளுக்கான தினம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். இருந்தாலும் முதலில் குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளைக் கொண்டாட வேண்டும். மாற்றங்கள் குடும்பங்களிலிருந்து வர வேண்டும். பெண் குழந்தைகளுக்கான கல்வி, சம உரிமை என எல்லாமே கிடைக்க வேண்டும். அப்போதுதான் இந்த சமூகமும் பெண்களை மதிக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கின்றனர். பாலியல் தொழிலில் ஈடுபட வைக்கின்றனர். இந்த நிலை மாறினால்தான் உண்மையான பெண் குழந்தைகளுக்கான தினத்தைக் கொண்டாட முடியும்.
+ There are no comments
Add yours