நீட் தேர்வு பற்றிய காங்கிரசின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு விளக்கம் !

Spread the love

புதுடெல்லி: நீட் தேர்வு முறைகேட்டை மோடி அரசு மூடி மறைக்கத் தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ள நிலையில், நீட் தேர்வர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை, கல்வி அமைச்சர் மற்றும் தேசிய தேர்வு முகமை மூலம் மூடி மறைக்க மோடி அரசு தொடங்கியுள்ளது. நீட் வினாத்தாள் கசியவில்லை என்றால் பிஹாரில் வினாத்தாள் கசிவு காரணமாக 13 பேர் கைது செய்யப்பட்டது ஏன்? வினாத்தாளை கசியவிட்ட மோசடி கும்பலுக்கு ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பணம் செலுத்தப்பட்டிருப்பதை பாட்னா காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு அம்பலப்படுத்தியது பொய்யா?

இதேபோல், குஜராத்தின் கோத்ராவில் NEET-UG தேர்வுக்கு கோச்சிங் சென்டர் நடத்தும் நபர், ஆசிரியர் மற்றும் மற்றொரு நபர் உட்பட 3 பேர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களுக்கு இடையே ரூ.12 கோடிக்கு மேல் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் குஜராத் காவல் துறை தெரிவித்திருக்கிறதே? மோடி அரசின் கூற்றுப்படி நீட் தேர்வில் வினாத்தாள் கசியவில்லை என்றால் ஏன் இந்தக் கைதுகள்?

மருத்துவராக வேண்டும் எனும் கனவுடன் 24 லட்சம் இளைஞர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். 1 லட்சம் மருத்துவ இடங்களுக்காக இரவு பகலாக அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். இந்த 1 லட்சம் இடங்களில், சுமார் 55,000 இடங்கள் அரசு கல்லூரிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் இடபிள்யூஎஸ் பிரிவினருக்கான இடங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த முறை, மோடி அரசு தேசிய தேர்வு முகமையை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைகள் விஷயத்தில் மிகப் பெரிய மோசடி செய்துள்ளது. இதன் காரணமாக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கான கட்-ஆஃப் அதிகரித்துள்ளது. சலுகைக் கட்டணத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முயன்ற நேர்மையான மாணவர்களின் கனவுகளை கருணை மதிப்பெண்கள், வினாத்தாள் கசிவு ஆகியவை பறித்துள்ளன” என்று கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

இதேபோல், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெர்ரா, “நீட் தேர்வு முடிவுகளைப் பார்க்கும்போது, இந்த செயல்முறை சுத்தமாகவோ அல்லது ஆரோக்கியமாகவோ இருக்கவில்லை. நீட் தேர்வின் மூலம் நாட்டின் 24 லட்சம் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகியுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் 7 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்ற நிலையில், இந்த ஆண்டு 67 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இதற்கு கல்வி அமைச்சரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. வினாத்தாள் கசிவு தொடர்பாக பிஹாரில் சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். குஜராத் மாநிலம் கோத்ராவில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்திருப்பதை இந்தச் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளன.

நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை, நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ய தன்னால் முடிந்தவரை முயன்றது. இந்த விவகாரத்தில் சில வலியுறுத்தல்களை காங்கிரஸ் முன்வைக்கிறது. 1) 580 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களின் தேர்வு மையங்களின் பெயர்களை வெளியிட வேண்டும். 2) 12-ம் வகுப்பின் போர்டு மதிப்பெண்கள் நீட் டாப்பர்களுடன் பொருந்த வேண்டும். 3) தேர்வர்கள் சராசரியை விட அதிக மதிப்பெண்கள் பெற்ற தேர்வு மையங்களின் வீடியோ பதிவு வெளியிடப்பட வேண்டும். 4) தேர்வு மையங்களை மாற்றிய அனைத்து மாணவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நீட் தேர்வாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மாணவர்களின் அனைத்து கவலைகளும் நியாயமான முறையிலும், சமத்துவத்தின் அடிப்படையிலும் தீர்க்கப்படும் என்பதை நான் உறுதியாக கூற விரும்புகிறேன். எந்த மாணவருக்கும் பாதகம் ஏற்படாது. எந்த மாணவரின் வாழ்க்கையும் ஆபத்தில் தள்ளப்படாது.

நீட் தேர்வு தொடர்பான உண்மைகள் உச்ச நீதிமன்றத்தின் கவனத்தில் உள்ளன. மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மாணவர்களின் நல்வாழ்வுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். நீட் கவுன்சிலிங் செயல்முறை விரைவில் தொடங்கும். மேலும், இந்த திசையில் எந்த குழப்பமும் இல்லாமல் முன்னேறுவது மிகவும் முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நீட் தேர்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முழு விவரம்: 1,563 பேருக்கு வழங்கிய நீட் கருணை மதிப்பெண் ரத்து: ஜூன் 23-ல் மறுதேர்வு


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours