நீதி கேட்டு ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயற்சி!

Spread the love

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன்று முழு வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.

அரசு பேருந்துகள் மட்டும் குறைந்த அளவில் இயக்கப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இதனிடையே உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு இந்தியா கூட்டணி கட்சியினர் சார்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநர் மாளிகை அருகே வந்த போது போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்த போலீஸார் தடுப்புகளை அமைத்திருந்தனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளைத் தாண்டி உள்ளே செல்ல முயன்றதோடு, தடுப்புகளையும் தள்ளி விட முயற்சித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது போலீஸார் சிலர், போராட்டக்காரர்கள் மீது தங்கள் கைகளில் இருந்த தடிகளால் தாக்கினர். இதனால் போராட்டக்காரர்களும் தங்கள் கைகளில் இருந்த கட்சிக் கொடிகளை போலீஸார் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிலர் அங்கு அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளைத் தாண்டி ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர். தடுப்புகளைத் தாண்டி உள்ளே சென்றவர்கள், ஆளுநர் மாளிகை வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முயன்றவர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours