ஹூப்ளி கல்லூரியில் கொலை செய்யப்பட்ட தங்களது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், கல்லூரி மாணவி நேஹாவின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளி மாநகராட்சி உறுப்பினர் நிரஞ்சனா ஹிரேமாதாவின் மகள் நேஹா. இவர் கல்லூரியில் எம்சிஏ படித்து வந்தார். அவரை பாகல் ஃபயாஸ் என்ற மாணவன் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இந்த காதலை நேஹா ஏற்கவில்லை.
கொலை செய்யப்பட்ட ஹூப்ளி கல்லூரி மாணவி நேஹா
கொலை செய்யப்பட்ட ஹூப்ளி கல்லூரி மாணவி நேஹா
இதனால் கல்லூரி வளாகத்தில் வைத்து ஏப்.18-ம் தேதி நேஹாவை ஃபயாஸ் கத்திக் குத்திக்கொலை செய்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இந்த கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக ஃபயாஸை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இக்கொலை விவகாரத்தை எதிர்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. நேஹா கொலை வழக்குத் தொடர்பாக சிஐடி போலீஸார் விசாரணை நடத்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நேஹாவின் தந்தை நிரஞ்சன் ஹிரேமத் மற்றும் தாய் கீதாவிடம் சிஐடி அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று விசாரணை நடத்தினர். மேலும், தார்வாட் சிறையில் உள்ள ஃபயாஸை, கொலை நடந்த இடத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நேஹாவின் தந்தை நிரஞ்சன் ஹிரேமத், தாய் கீதா ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அமித் ஷாவிடம் கோரிக்கை மனு அளித்த நேஹாவின் பெற்றோர்.
அமித் ஷாவிடம் கோரிக்கை மனு அளித்த நேஹாவின் பெற்றோர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான பிரகலாத் ஜோஷிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கர்நாடகாவிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹூப்பள்ளிக்கு நேற்று மாலை வந்தார். அங்கு அவரை நேஹாவின் பெற்றோர் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.
அப்போது அவர்களிடம், நேஹா கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமித் ஷா கேட்டறிந்தார். அத்துடன் நேஹாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
+ There are no comments
Add yours