டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு பிரச்சினை தொடர்பான வழக்கில் உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பஞ்சாப்பில் நெல் உற்பத்தியை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
டெல்லியில் காற்று மாசுபாடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதன்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, ‘‘ஒற்றை இலக்கம் மற்றும் இரட்டை இலக்க எண்கள் கொண்ட தனியார் வாகனங்களை மாறி, மாறி இயக்கும் திட்டம் குறைந்த பலனை அளித்தாலும், அந்த நடைமுறையை வெள்ளிக் கிழமை முதல் டெல்லி அரசு அமல்படுத்த வேண்டும். டெல்லியில் பதிவு செய்யப்பட்ட டாக்சிகளை மட்டுமே சாலைகளில் அனுமதிப்பது தொடர்பாக டெல்லி அரசு பரிசீலிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டிருந்தனர்.
இதையடுத்து ஒற்றை மற்றும் இரட்டை இலக்க எண்கள் படி வாகனங்களை இயக்குவதால் மாசு 13 சதவீதம் குறைந்துள்ளது என உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு தெரிவித்தது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பஞ்சாப் மாநிலத்தில் நெல் பயிரிடுவதற்கு அதிக தண்ணீர் தேவைப்படுவதால், அங்கு நீர்மட்டமும் குறைந்து வருகிறது. பஞ்சாபில் இன்னொரு பாலைவனம் நமக்கு வேண்டாம். அறுவடைக்குப்பின் வைக்கோல்களை எரிப்பதால் காற்று மாசும் அதிகரிக்கிறது. அங்கு வைக்கோல் எரிக்கப்படுவதும் நிறுத்தப்பட்டு காற்றின் தரம் மேம்பட நாங்கள் விரும்புகிறோம். இதற்கான நடவடிக்கை எடுப்பது மத்திய, மாநில அரசுகளின் பணி. பஞ்சாபில் நெல் உற்பத்தியை படிப்படியாக குறைப்பதற்கான நடவடிக்கை தேவை” என்று தெரிவித்தனர்.
+ There are no comments
Add yours