கரோனா பெருந்தொற்று காலத்தில், ஆங்கில மருந்துகளைவிட தங்கள் நிறுவனத்தின் ஆயுர்வேத மருந்துதான் சிறந்தது என பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது.
இந்த விளம்பரத்துக்கு எதிராக இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் விளம்பரத்தை நிறுத்த உத்தரவிட்டது. ஆனாலும் தொடர்ந்து வெளியிட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் ஆசானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:மருந்துகள் மற்றும் மந்திர சிகிச்சை (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) (டிஎம்ஆர்) சட்டத்தின் 170-வது விதி, மந்திர திறன்களைக் கொண்ட மருந்துகள் எனக் கூறி விளம்பரப்படுத்துவதை தடை செய்கிறது. இந்த விதியின் கீழ் பதஞ்சலி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?மேலும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனைத்து மாநிலஅரசுகளுக்கும் எழுதிய கடிதத்தில், டிஎம்ஆர் சட்டத்தின் 170-வது விதியை அமல்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளபோது அதை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க முடியுமா? இதுகுறித்து பதில் அளிக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
+ There are no comments
Add yours