“நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்” என்று, யோகா குரு பாபா ராம்தேவை உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம், குணப்படுத்தவே வாய்ப்பில்லாத நாள்பட்ட நோய்கள், மரபணு நோய்களை உள்ளிட்டவற்றை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்துகள் குணப்படுத்தும் என விளம்பரங்களை வெளியிட்டது.
இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பதஞ்சலி நிறுவனத்தை கடுமையாக எச்சரித்ததுடன், தவறான விளம்பரங்களை வெளியிட வேண்டாம் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும் கடந்த 4 மாதங்களாக பதஞ்சலி இதுபோன்ற விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. இதையடுத்து பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதில் மனுவை தாக்கல் செய்யாமல் பதஞ்சலி நிறுவனம் காலம் கடத்தி வந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கண்டித்ததும் ராம்தேவ் மன்னிப்புக் கோரினார்.
அப்போது இனி இதுபோன்ற விளம்பரங்கள் செய்யப்படாது என்று உறுதியும் அளித்தார். இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தபோது, நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக மீண்டும் பதஞ்சலி ராம்தேவ் புதிய மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. “உச்ச நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியுள்ளதால், ராம்தேவ் எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் ஏற்க முடியாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்” என்று ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
மேலும், “பதஞ்சலி நிறுவனத்தின் மீது ஏன் உத்தராகண்ட் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பதஞ்சலி நிறுவன விவகாரத்தில் மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது?” என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
+ There are no comments
Add yours