மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு உரிய வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் சந்தித்தார்.
மிக்ஜாம் புயலானது சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாடு மாவட்டங்களை வெள்ளத்தில் மிதக்க விட்டது. இதனைத் தொடர்ந்து குமரிக்கடல் பரப்பின் வளிமண்டல சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பெருமழை கொட்டித் தீர்த்தது. வரலாறு காணாத இந்தப் பெருமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. காயல்பட்டினத்தில் நூற்றாண்டு காணாத வகையில் ஒரே நாளில் 95 செமீ மழை- அதாவது ஓராண்டு முழுவதும் பெய்யக் கூடிய பெருமழை கொட்டித் தீர்த்தது.
தற்போது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முப்படைகளின் உதவியும் கோரப்பட்டுள்ளது. விமானப் படை ஹெலிகாப்டர்கள், கப்பற்படை ஹெலிகாப்டர்களும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அமைச்சர்கள் பலரும் இந்த பணிகளில் முழு வீச்சில் இறங்கி உள்ளனர்.
இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அண்மையில் பெய்த மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரவும், தற்போது தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துக் கூறி ஆலோசிக்கவும், முதல்வர் ஸ்டாலின் நேரம் கோரி கடிதம் எழுதி இருந்தார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை இரவு 10.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
பிரதமர் மோடியை சந்தித்த பின்னர் தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிலையைப் பற்றி எடுத்துரைத்தேன். நடைபெற்று வரும் மீட்புப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும், முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்கவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி வேண்டி கோரிக்கை மனுவை அளித்தேன். இத்தகைய கடினமான காலத்தில் தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன் கேட்டறிந்தமைக்குப் பிரதமர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours