பிரதமர் மோடி பாதுகாப்பிற்குச் சென்ற 6 போலீஸார் விபத்தில் பலி!

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமரின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக சென்ற போலீஸாரின் கார், லாரி மீது மோதிய விபத்தில் 6 போலீஸார் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி மாநிலம் முழுவதும் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை ராஜஸ்தானில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட 7 போலீஸார் கார் ஒன்றில் ஜுன்ஜுனு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

ஷுரு மாவட்டத்தின் சுஜான்கர் சாதர் பகுதி அருகே வந்தபோது லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 7 போலீஸாரையும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே 6 போலீஸார் உயிரிழந்தனர். படுகாயமடைந்து உயிருக்கு போராடிவரும் சுக்காராாம் என்ற காவலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்த போலீஸாருக்கு அம்மாநில காவல்துறை இயக்குநர் உமேஷ் மிஸ்ரா இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்பு பணிக்காக சென்று கொண்டிருந்த போலீஸார், விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours