இந்தியாவில் கொரோனா ஜேஎன் 1 திரிபு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் விமான பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை பீகார் அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும், கொரோனா திரிபான ‘ஜே.என்.1’ தொற்று கடந்த சில நாள்களாக அதிக அளவில் பரவி வருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவல் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 751 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது கடந்த மே 21-ம் தேதியிலிருந்து இதுவரை இல்லாத அளவில் ஒரு நாளைய உயர்ந்தபட்ச பாதிப்பு எண்ணிக்கையாகும். கொரோனா தொற்றுக்கு கேரளத்தில் இருவரும், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகத்தில் ஒருவரும் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 5,33,332 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,50,07,964 ஆகும்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக கொரோனா திரிபான ‘ஜே.என்.1’ தொற்று நாடு முழுவதும் திடீரென அதிகரித்து வருகிறது. இதன் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மீண்டும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பீகார் மாநிலத்துக்கு விமானங்கள் மூலம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பீகாரில் அனைத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெளியிடப்பட்ட உத்தரவில், “பாட்னா, கயா, தர்பங்கா விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வகையில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் முதல் மாநிலமாக மீண்டும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை பீகார் அரசு கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours