தெலங்கானாவில் பிஆர்எஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ், பேருந்து யாத்திரை மூலம் தனது 17 நாள் தேர்தல் பிரச்சாரத்தை இன்று துவக்கினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தெலங்கானாவில் போட்டியிடும் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் (கேசிஆர்), 17 நாள் தேர்தல் பிரச்சார பேருந்து யாத்திரையை இன்று துவங்கினார். ஹைதராபாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து இந்த பிரச்சார யாத்திரை துவங்கியது.
முன்னதாக பிஆர்எஸ் தலைவர்கள் பிரச்சார பேருந்துக்கு சிறப்பு பூஜை செய்து அதற்கு ‘தெலங்கானா பிரகதி ரதம்’ என்று பெயரிட்டனர். யாத்திரையின் ஒரு பகுதியாக, முன்னாள் முதல்வர் கேசிஆர் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.
மேலும், சாலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் எனவும், தொண்டர்களுடன் உரையாடுவார் எனவும் பிஆர்எஸ் கட்சி தெரிவித்துள்ளது. பேருந்து யாத்திரையின்போது, கேசிஆர் காலையில் வயல்களில் விவசாயிகளுடன் கலந்துரையாடுவார் என்றும், மாலையில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பார் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை மிர்யாலகுடாவில் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் ராவ் ஏற்பாடு செய்துள்ள தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் சந்திரசேகர் ராவ் பங்கேற்கிறார். தெலங்கானாவில் 13 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு, வரும் மே 13-ம் தேதி நடைபெறும் 4-ம் கட்ட தேர்தலில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது
+ There are no comments
Add yours