மக்களவைத் தேர்தல்: சோனியா காந்தி தெலங்கானாவில் போட்டியிட காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்!

Spread the love

2024 மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தி தெலங்கானா மாநிலத்தில் இருந்து போட்டியிடவேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சமீபத்தில் தெலங்கானா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், மாநிலம் பிரிக்கப்பட்ட 2014 முதல் இரு முறையாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி முதன்முறையாக அரியணையில் ஏறியது, முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.

இந்த நிலையில் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள காந்திபவனில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபிறகு நடத்தப்பட்ட முதல் செயற்குழுகூட்டம் என்பதால் அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்ரே, மாநில முதல்வர் ரேவந்த்ரெட்டி மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் வெற்றி பெறுவதற்கான வியூகம் குறித்து விவாதித்தனர். மேலும் தெலங்கானாவில் போட்டியிட்டு சோனியாகாந்தி எம்பியாக வெற்றிபெற வைப்பது. இம்மாநிலத்தில் உள்ள 17 எம்பி தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களை தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிப்பது. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மாநில அமைச்சருமான சபீர் அலி கூறுகையில், தெலங்கானா மாநில மக்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் தெலங்கானாவை தனி மாநிலமாக வழங்க ஏற்பாடு செய்தவர் சோனியாகாந்தி. தெலங்கானா மக்கள் நன்றி மறக்க மாட்டார்கள். இதனால்தான் தற்போது காங்கிரஸ் முதன்முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. எனவே வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியை தெலங்கானாவில் போட்டியிட்டு எம்பியாக வெற்றிபெறச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம். இதுதொடர்பாக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். இதனை தேசிய தலைவர் கார்கேவுக்கு அனுப்பியுள்ளோம்” என்று அவர் கூறினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours