ஜம்மு – காஷ்மீரில் ராணுவத்தால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட குடிமக்களில் 3 பேர் உயிரிழந்த நிலையில், பயங்கரவாதிகளுடன் போரிடுமாறும், குடிமக்களை தாக்கக் கூடாது என்றும் ராணுவத்தினருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ராணுவ வாகனங்கள் மீது நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட வனப் பகுதிகளில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை தேடிப்பிடிக்கும் பணிகளை ராணுவம் தீவிரப்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பூஞ்ச் பகுதியில் குடிமக்கள் பலர் ராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். அவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட 8 பேரில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ரஜோரியில் நிலைமையை ஆய்வு செய்ய செல்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை ஜம்முக்கு வந்தார்.
அப்போது ராணுவத்தினர் மத்தியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “நீங்கள் நாட்டின் பாதுகாவலர்கள். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமின்றி, மக்களின் இதயங்களை வெல்லும் பொறுப்பும் உங்களுக்கு இருக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். ஒரு இந்தியரை கூட காயப்படுத்தும் எந்த தவறும் இருக்கக்கூடாது. நாம் போர்களில் வெற்றி பெற வேண்டும். பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும். ஆனால் மக்களின் இதயங்களை வெல்வதே நமது மிகப்பெரிய நோக்கமாக இருக்க வேண்டும். நாம் போர்களில் வெல்வோம். அதே வேளையில் மக்களின் மனங்களையும் வெல்ல வேண்டும். இதைச் செய்ய உங்களால் முடிந்தவரை நீங்கள் முயற்சி செய்வீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.
ஒவ்வொரு இந்தியரும் இவ்வாறுதான் உணர்கிறார்கள். யாராவது உங்கள் மீது தீய கண்கொண்டு பார்த்தால் அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இத்தகைய தாக்குதல்களைத் தடுப்பதில் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கண்காணிப்பை அதிகரிக்க தேவையான எந்த ஆதரவும் அரசாங்கத்தால் வழங்கப்படும். நமது கருவூலத்தின் கதவுகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன.
நீங்கள் அனைவரும் விழிப்புடன் இருப்பதை நான் அறிவேன். ஆனால் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் துணிச்சல் எங்களை பெருமைப்படுத்துகிறது. உங்கள் தியாகம், முயற்சிகளுக்கு எதுவும் ஈடாகாது. அவை விலை மதிப்பற்றவை. ஒரு சிப்பாய் தனது உயிரை தியாகம் செய்யும்போது, நாம் சில இழப்பீடுகளை வழங்குகிறோம். ஆனாலும் அந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது. அரசு உங்களுடன் உள்ளது. உங்கள் நலன் மற்றும் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்று நான் உறுதியளிக்கிறேன்” என்றார்.
+ There are no comments
Add yours