மணிப்பூரில் மெய்தி போராளி 4 அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் குக்கி, மெய்தி ஆகிய இரு சமூத்தினரிடையே ஏற்பட்ட கலவரமானது நாட்டையே அதிரவைத்தது. தற்போது வரையில் மணிப்பூர் மாநில கலவரம் பற்றிய பேச்சுக்கள் நாடாளுமன்றம் மட்டுமல்லாது சாமானிய மக்கள் வரையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த கலவரமானது, மைத்தேயி இன மக்கள் தங்களை பழங்குடி இன பிரிவில் சேர்க்க கோரியபோது, அதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததில் இருந்து துவங்கியது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பழங்குடியின மக்களான குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் களமிறங்கியதில் இருந்து தொடங்கியது.
இதில் இரு பக்கமும் உயிர்சேதங்கள் ஏற்பட்டாலும் குக்கி இன பழங்குடியின மக்களுக்கு அதிக அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டன. 170-க்கும் அதிகமானோர் இந்த கலவரத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மணிப்பூரில் குக்கி, மெய்தி இன மக்களுக்கு இடையே வன்முறை நடைபெற்று வரும் நிலையில் 4 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் விடுதலை இராணுவம் (PLA), அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி (RPF), ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) மற்றும் அதன் ஆயுதப் பிரிவான மணிப்பூர் மக்கள் இராணுவம் ஆகிய 4 அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த 4 அமைப்புகளுக்கும் இந்தியாவின் இறையாண்மையை பின்பற்றவில்லை என்பதால் 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய , மாநில அரசுகள் மெய்தி குழுவிற்கு ஆதரவாக உள்ளதாக குக்கி தரப்பினர் கூறி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours