மத்திய இணை அமைச்சர் அனுப்பிரியாவுக்கு ‘இசட்’ பாதுகாப்பு!

Spread the love

புதுடெல்லி: மத்திய இணை அமைச்சரான அனுப்பிரியா பட்டேலின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை ‘இசட்’ பிரிவு பாதுகாப்பாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளம் கட்சியின் தலைவரான பட்டேலுக்கு, இது மக்களவைத் தேர்தலுக்கு முன்பான பாஜகவின் பரிசாகக் கருதப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தின் குர்மி சமூக ஆதரவு பெற்ற கட்சியாக இருப்பது சோனுலால் பட்டேல் 1995-ல் நிறுவியது அப்னா தளம். 2009-ல் அவரது மறைவிற்கு பின் இக்கட்சி மனைவி கிருஷ்ணா பட்டேல் மற்றும் மூத்த மகளான அனுப்பிரியா பட்டேல் ஆகியோருக்கு இடையே பிரிந்து நிற்கிறது. இதில், அனுப்பிரியா பட்டேல் பிரிவின் அப்னா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி உறுப்பினராக துவக்கம் முதல் உள்ளது.

உ.பி.யின் மிர்சாபூர் எம்.பி.யான அனுப்பிரியா மத்திய வர்த்தகத் துறையின் இணை அமைச்சராகவும் உள்ளார். இவருக்கு மத்திய அரசு சார்பில் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இது, இன்று இசட் பிரிவு பாதுகாப்பாக உயர்த்தி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அமைச்சர் அனுப்பிர்யாவுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பது ஓர் அரசியல் பரிசாகக் கருதப்படுகிறது. இந்த பாதுகாப்புடன் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார மேடைகளில் பேசுவது மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது.

அப்னா தளத்தின் கமர்வாதி பிரிவி தலைவர் கிருஷ்ணா பட்டேல் 2022-ன் உத்தரபிரதேச சட்டப்பேரவையில் சமாஜ்வாதியுடன் கூட்டணியாக இணைந்தார். கிருஷ்ணாவின் இளைய மகளான பல்லவி பட்டேல், அலகாபாத்தின் சிராத்துவில் உபி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவை வென்று எம்.எல்.ஏவாக உள்ளார்.

இதுபோல், மக்களவை தேர்தலுக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது முதன்முறையல்ல. இதற்கு முன், பகுஜன் சமாஜின் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதியின் கட்சியின் அரசியல் வாரிசான ஆகாஷ் ஆனந்துக்கு ஒய் பாதுகாப்பு கிடைத்தது. இதன் பின்னணியில், குடியரசு தேர்தல் முதல் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கானத் தேர்தல் வரை பிஎஸ்பியின் எம்எல்ஏக்கள் பாஜகவிற்கே ஆதரவளித்தனர். இதன் காரணமாக, பிஎஸ்பியை பாஜகவின் ரகசியக் கூட்டணி என உ.பி.யில் பேசப்படுகிறது.

2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் நாட்டில் பலருக்கு இருந்த மத்திய பாதுகாப்பு பிரிவுகள் வாபஸ் பெறப்பட்டன. தற்போது, மிகவும் முக்கியமான விவிஐபி மற்றும் விஐபிகக்ளுக்கு மட்டுமே இந்த பாதுகாப்புகள் அளிக்கப்படுகின்றன.

ஆகாஷ் ஆனந்துக்கு கிடைத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒய் பிரிவு பாதுகாப்பில், அதிகபட்சம் 2 கமாண்டோக்களுடன் 11 காவலர்களின் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அமைச்சர் அனுப்பிரியாவுக்கு, இசட் பிரிவில், 6 கமாண்டோக்கள் உள்ளிட்ட 22 காவலர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இதுபோன்ற மத்திய அரசின் பாதுகாப்பு பிரிவுகள், உபியில் அரசியல் அந்தஸ்தாகக் கருதப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours