புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரேபரேலி தொகுதியின் எம்.பி.யான சோனியா காந்தி, வயது முதிர்வு காரணமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, அந்த தொகுதி மக்களுக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதியிருந்தார். முன்னதாக, மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு சோனியா காந்தி ராஜஸ்தானிலிருந்து போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், மாநிலங்களவைக்கு நேற்று அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மக்களவை எம்.பி.யாக 6 முறை பதவி வகித்த சோனியா காந்தி, மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்பது இதுவே முதல் முறை.
குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜக தேசிய தலைவர் நட்டா உட்பட 4 பேர் போட்டியின்றி நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.
குஜராத் மாநிலத்தில் 4 மாநிலங்களவை இடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து, அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த நட்டா உள்ளிட்ட 4 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அவர்களைத் தவிர வேறு யாரும் அந்த இடங்களுக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யாததால் நட்டா உட்பட நான்கு பாஜக வேட்பாளர்களும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி ரீட்டா மேத்தா நேற்று அறிவித்தார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தவிர, அக்கட்சியைச் சேர்ந்த வைர வியாபாரியான கோவிந்த்பாய் தலோகியா, ஜஸ்வந்த்சிங் பர்மர், மயங்க் நாயக் ஆகியோரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் எல்.முருகன், மாயா நரோலியா, பன்சிலால் குர்ஜார் ஆகியோர் போட்டியின்றி நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.
15 மாநிலங்களைச் சேர்ந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து, காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் இடத்தை நிரப்ப பிப். 27-ல் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 15-ம் தேதி நிறைவடைந்தது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நேற்று கடைசி நாளாக இருந்தது.
+ There are no comments
Add yours