மக்களவை தேர்தலையொட்டி அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் 2 நாட்கள் ஆலோசனை மேற்கொள்கிறது. இதற்கான கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சி மே மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், 2024 மக்களவைத் மே மாத தொடக்கத்தில் நடத்தி முடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தலைமையி்லான ‘இந்தியா கூட்டணி’ பல்வேறு வியூகங்களை வகுத்து பணியாற்றி வருகிறது. பாஜகவும் அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கி இருக்கிறது. தமிழகத்தில் திமுக – அதிமுக – பாஜக என மூன்று கட்சிகளும் முதற்கட்ட தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான பல்வேறு முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக டெல்லியில் இன்றும், நாளையும் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கலந்து கொள்கிறார்.
இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலமும் மேற்கொண்டுள்ள மக்களவைத் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் பற்றி ஆய்வு செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் மக்களவைத் தேர்தல் தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.
+ There are no comments
Add yours