சத்தீஸ்கர் மாநிலம், கவர்தாவில் 20 அடி பள்ளத்தில் மினி சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் பழங்குடியினர் 17 பேர் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கரின் கவர்த்தா பகுதியில் ‘பைகா’ பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் கொண்ட குழுவினர், பாரம்பரிய ‘டெண்டு’ இலைகளை சேகரித்துக்கொண்டு மினி சரக்கு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்த வாகனம் பஹ்பானி பகுதியில் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் பயணித்த அனைவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் இந்த சம்பவத்தில் 17 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்துக்குள்ளான அனைவரும் குயி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ‘பைகா’ பழங்குடி சமூகத்தினர் பீடி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அவர்கள் ‘டெண்டு’ இலைகளை சேகரிக்கின்றனர். ‘டெண்டு’ இலைகள் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சேகரிக்கப்படுகின்றன. இந்த இலைகள் பீடிகளை உருட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கிடையே இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில அரசு, துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளது. இந்த விபத்து உள்ளூர் பழங்குடி சமூகத்தினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
+ There are no comments
Add yours