மோடியின் கட்டளை படி செயல்படுகிறது தேர்தல் ஆணையம் – மம்தா பானர்ஜி!

Spread the love

தேர்தல் ஆணையம், பாஜக கட்சி சகாக்களின் கட்டளை படி செயல்படுவதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ள கஜோலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் இன்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மல்தாஹா உத்தர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரசூன் பானர்ஜியை ஆதரித்து பேசிய மம்தா பானர்ஜி, “ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை தேர்தல்கள் 7 கட்டங்களாக திட்டமிடப்பட்டுள்ளன. அப்போது தான் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் ஒவ்வொரு கட்டத்துக்கும் முன்பு நாடு முழுவதும் சிறப்பு விமானங்களில் பயணம் செய்யலாம். முன்பெல்லாம் மே மாதத்திற்குள்ளாகவே தேர்தல்கள் முடிந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மோடி ராணுவ விமானங்களில் பல்வேறு இடங்களுக்குச் செல்ல ஏதுவாக இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் நாங்கள் சொந்த போக்குவரத்தில் பிரச்சாரத்துக்கு சென்று வருகிறோம். ஹெலிகாப்டர்கள் பாஜக தலைவர்களால் முன்பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. இதனால் எங்களுக்கு அவை போதிய அளவில் கிடைப்பதில்லை.

கடும் வெயிலில் மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். ஆனால் பாஜக தலைவர்கள் விவிஐபி-க்களுக்கான அனைத்து வசதிகளுடன் பிரச்சாரம் செய்வதால் மோடிக்கு எந்த இடையூறும் இல்லை.

தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை காபந்து அமைச்சரவையாக இருந்தாலும், அரசு நிர்வாக இயந்திரங்களை நடத்துவதற்கு பொறுப்பான தேர்தல் ஆணையம் மோடி மற்றும் அவரது கட்சி சகாக்கள் கட்டளையிட்ட படி செயல்படுகிறது.

கடந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் எம்பி-க்கள் வெற்றி பெற்ற போதிலும், மேற்கு வங்கத்துக்கு மத்திய அரசின் நூறுநாள் வேலைத்திட்ட நிதி, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தருவது தொடர்பாக எந்த உதவியையும் பெற்றுத்தரவில்லை” என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours