உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து களமிறங்க உள்ளதாக அவரை மிமிக்ரி செய்து புகழ் அடைந்த காமெடியன் ஷியாம் ரங்கீலா அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும், ’மனதின் குரல்’ என்ற பெயரில் வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சி பாஜகவினர் மற்றும் கிராம பகுதிகளை சேர்ந்த மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களின் தனிப்பட்ட சாதனைகளை குறிப்பிட்டு பேசுவதை பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியின் போது வாடிக்கையாக வைத்துள்ளார். இருப்பினும் இந்த நிகழ்ச்சி குறித்தான எதிர்மறை விமர்சனங்களுக்கும் எவ்வித பஞ்சமும் இல்லை.
பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியின் போது தெரிவிக்கும் பல்வேறு கருத்துகளும் சில நேரங்களில் கேலி, கிண்டலுக்கு உள்ளாகும். அந்த வகையில் மோடியின் ’மனதின் குரல்’ நிகழ்ச்சியை சிலர் மிமிக்ரி செய்வதும் வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் ஷியாம் ரங்கீலா என்பவர் மனதின் குரல் நிகழ்ச்சியை தொடர்ந்து மிமிக்ரி செய்து கலாய்த்து வந்ததால், அவரது வீடியோக்கள் இணையதளங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றது. அதனால் ஷியாம் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினராலும் அறியப்பட்டவராக மாறினார்.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் மோடியின் வாராணசி தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், ”நாட்டில் அரசியல் மிகப்பெரிய நகைச்சுவையாக மாறிவிட்டது. எனவே நானும் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து நான் போட்டியிட இருக்கிறேன். இது ஒரு ஜனநாயக வழிமுறை. யார் வேண்டுமானாலும் யாரை எதிர்த்து வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். மக்களின் பேராதரவோடு நான் வெற்றி பெறுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”நான் போட்டியிடுவதால் வாராணசி தொகுதி மக்களுக்கு மாற்று வாய்ப்பு கிடைக்கும். சூரத், இந்தூர் தொகுதிகளை போல் மாற்று வாய்ப்பு இல்லாமல் போகாது. எனவே வரும் வாரத்தில் என்னுடைய வேட்பு மனுவை பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வாராணசி தொகுதியில் நான் தாக்கல் செய்ய உள்ளேன். முடிவு எதுவாக இருந்தாலும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
சூரத் மற்றும் இந்தூர் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிரான காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பிற வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொண்டதால், அங்கு பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை சுட்டிக்காட்டி தற்போது ஷியாம் ரங்கீலா, மோடியின் குரலிலேயே மிமிக்ரி செய்து தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours