தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இதன் மூலம் மோடி அரசின் மற்றொரு ஊழல் அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் வகையில், கடந்த 2018 ஜனவரி 2ம் தேதி மத்திய அரசு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை கொண்டுவந்தது. இந்த திட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பவர்கள் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ. 1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும். தனி நபர்கள் நிறுவனங்கள் என தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும்.
ஒரு நபர் அல்லது நிறுவனம் சார்பில் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். தேர்தல் பத்திரங்களை வாங்கும் தனி நபர், நிறுவனங்கள் யார் என்ற விவரங்கள் பொதுமக்களுக்கோ அல்லது நன்கொடையை பெறும் அரசியல் கட்சிக்கு அளிக்கப்படாது. எனினும், அரசு மற்றும் வங்கி சார்பில் இந்த விவரங்களை சேகரித்துக் கொள்ளலாம்.
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து, இன்று தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். ஐந்து நீதிபதிகளும் ஒருமித்து வழங்கிய தீர்ப்பில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்டவிரோதமானது எனக் கூறி அதனை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
அந்த தீர்ப்பில், “அரசை கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசியல் சாசன பிரிவு 19 (1) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளது. கருப்பு பணத்தை தடுக்க தேர்தல் பத்திரங்களை அனுமதிக்கிறோம் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல.
தேர்தல் பத்திரங்கள் லஞ்சத்திற்கு வழி வகுக்கும். கருப்பு பணத்தை தடுக்க தேர்தல் பத்திரங்கள் அனுமதிக்கிறோம் என்கிற வாதம் ஏற்புடையது அல்ல. எனவே சட்டத்துக்கு விரோதமான தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை மார்ச் 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “மோடி அரசின் மற்றொரு ஊழல் வெளிவந்துள்ளது. மோடியின் ஊழல் கொள்கைகளுக்கு மற்றொரு சான்றாக இது உங்கள் முன் உள்ளது. தேர்தல் பத்திரங்களை லஞ்சம் மற்றும் கமிஷன் வாங்கும் ஊடகமாக பாஜக மாற்றியது. இன்று இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது” என்று ராகுல் காந்தி தெரிவைத்துள்ளார்.
+ There are no comments
Add yours