ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வர வேண்டும்… கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா !

Spread the love

இண்டியா கூட்டணியின் சார்பில், பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே முன்மொழியப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வர வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே பரிந்துரைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு “காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்ததில் எனக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை. எங்கள் கூட்டணி ஒன்றுபட்டுள்ளது. நாங்கள் ஒற்றுமையாகப் போராடுவோம்” என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறி சர்ச்சைப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதையடுத்து நேற்று பெங்களூரில் காங்கிரஸின் 139-வது நிறுவன தின நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வர வேண்டும். இந்த நாட்டின் பிரச்சனைகளை தீர்க்கும் வலிமை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே உள்ளது. அதற்கு ராகுல் காந்தி நாட்டின் பிரதமராக வர வேண்டும். தற்போது மீண்டும் பாரத் ஜோடோ யாத்திரை துவங்க உள்ளது. அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, ‘பாரத் நியாய யாத்திரை’ துவங்கப்படவிருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி மற்றும் சமத்துவத்தை உறுதி செய்ய ராகுல் பிரதமராக வேண்டும்.

அனைவரும் ஒன்றிணைந்து போராடி காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும். சிலர் மென்மையான இந்துத்துவா பற்றி பேசுகிறார்கள். இந்துவும் இந்துத்துவாவும் வேறு வேறு. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த யாரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆர்எஸ்எஸ் 1925 இல் நிறுவப்பட்டது. ஆனாலும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிரான இயக்கத்தில் பங்கேற்கவில்லை. தேசியவாதம் மற்றும் தேசபக்தி என்ற பெயரில் பாஜக தலைவர்கள் பரப்பும் பொய்களை காங்கிரஸ் தலைவர்கள் அம்பலப்படுத்த வேண்டும். நாட்டுக்காக கடந்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் அளித்த பங்களிப்புகளை கேள்வி கேட்க பாஜக தலைவர்களுக்கு தார்மீக உரிமை இல்லை. நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக ஏதேனும் அணை கட்டியதா?” என்றார். 2019 மக்களவை தேர்தலுக்கு முன்பும், ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என சித்தராமையா களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours