வயநாடு தொகுதியில் எம்.பியாக இருந்து எந்த மக்கள் நலத்திட்டங்களையும் ராகுல் காந்தி செய்யவில்லை என்று அத்தொகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவதால் வயநாடு தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறிவிட்டது. இந்த தொகுதியில் அவருக்குப் போட்டியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் போட்டியிடுகிறார். தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த தொகுதியில் போட்டியிடுவதை கூட்டணி கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஆனி ராஜா நேற்று தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வயநாடு தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக எம்,பியாக இருந்த ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் இந்த தொகுதி குறித்த கோரிக்கையை ஏதாவது எழுப்பியது உண்டா? இந்த தொகுதியை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார் ராகுல் காந்தி. தொகுதிக்கு எந்த உதவியும் அவர் செய்யவில்லை. மொழி பெயர்ப்பாளர் இல்லாமல் அவரை அணுக முடியாத நிலையே உள்ளது. இந்த தொகுதியில் போக்குவரத்து பிரச்சினை, ரயில்வே பாதை, மனித விலங்கு மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எந்த நடவடிக்கையும் ராகுல் காந்தி எடுக்கவில்லை” என்று விமர்சித்தார்.
+ There are no comments
Add yours