பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதாயத்துக்கான ராமர் கோயில் விழாவில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தி உள்ளது.
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன. 40 ஆண்டு காலமாக வட இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தி வந்த ராமர் கோயில் நிறைவாக விழா காண்கிறது. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே எதிர்பார்ப்புகள் தீவிரம் பெற்றிருந்த அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா ஜன.22 அன்று அரங்கேற இருக்கிறது.
ஆனால் அதையொட்டி அரங்கேறி வரும் அரசியல், ராமர் கோயில் பரபரப்பை விட அதிகமாகி வருகிறது. ராமர் கோயிலுக்கு யாருக்கு அழைப்பு வழங்குவது என்பதில் தொடங்கி எவரை புறக்கணிப்பது என்பது வரை பலவாறான அரசியலும் வெடித்தது. பாஜக தனது தேர்தல் அரசியல் ஆதாயத்துக்காக ராமர் கோயில் விழாவினை பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பாஜகவினரே வலு சேர்த்தனர்.
இவற்றுக்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர்கள் ராமர் கோயில் விழாவில் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்புகள் மற்றும் ஊகங்களின் மத்தியில், கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. ’ராமர் கோயில் என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் அரசியல் திட்டம், கோயில் பணிகள் இன்னமும் முழுமை பெறவில்லை, ராமர் கோயில் விழா என்பதை தேர்தல் ஆதாயத்திற்காக முன்னெடுக்கின்றனர்’ என 3 காரணங்களை முன்வைத்து காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளது.
“ராமரை நம் நாட்டில் லட்சக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். மதம் என்பது தனிப்பட்ட விஷயம். ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நீண்ட காலமாக அயோத்தியில் ராமர் கோயில் என்ற அரசியல் திட்டத்தை உருவாக்கி வருகிறது. அதிலும் முழுமையடையாத கோயிலை திறந்து வைத்தது தேர்தல் ஆதாயம் பெறப் பார்க்கிறார்கள். 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு, ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்” என்று காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours