தமிழகத்திற்கு இன்று வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் உட்பட ரூ.20,140 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருச்சியில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார். 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த இரண்டு நிலை கட்டடத்தில் ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகளை கையாள முடியும் என்றும், உச்சகட்ட போக்குவரத்து நேரங்களில் 3 ஆயிரத்து 500 பயணிகளை சமாளிக்க இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை, பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். மதுரை – தூத்துக்குடி இடையிலான 160 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இரட்டை ரயில்வழித்தடம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால், பயணிகள், சரக்கு ரயில் சேவைகள் வலுபெறும் என்றும், பொருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் தமிழ்நாட்டிற்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேபோல், திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, உத்திரகோசமங்கை, தேவிப்பட்டிணம், ஏர்வாடி, மதுரை மற்றும் பிற பகுதிகளை இணைக்கும் ஐந்து சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
காமராஜர் துறைமுகத்தில், வாகன இறக்குமதி ஏற்றுமதிக்காக கட்டமைக்கப்பட்டுள்ள ஜெனரல் கார்கோ இரண்டாம் பெர்த்தை, பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். பின், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டங்கள், வர்த்தகம், வீட்டுத்தேவை, தொழில்தேவைகளை நிறைவேற்றக்கூடிய திட்டங்களாக இருக்கும் என கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours