சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் கேஸ் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியதை அடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பன்மடங்கு உயர்ந்தது. பின்னர், கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியது. இதையடுத்து, பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறையத் தொடங்கின.
ஆனால் மறுபுறம் இஸ்ரேலுக்கும்-ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கு இடையே நடைபெற்று வரும் போர் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பரவியுள்ளதால், எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது. எனவே சென்னையில் 19 கி.கி எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.12.50 விலை உயர்ந்திருக்கிறது. ஏற்கெனவே இந்த சிலிண்டர் ரூ.1924.50க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.1937க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் டீக்கடை, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட சிறு குரு வணிகர்கள் பாதிப்பை எதிர்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours