கர்நாடகாவில் அரசு பேருந்தும், காரும் இன்று நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம் குமட்டாவை நோக்கி அரசு பேருந்தும், குமட்டாவில் இருந்து சிர்சியை நோக்கி காரும் இன்று வந்து கொண்டிருந்தன. காலை 11 மணியளவில் சிர்சி தாலுகாவில் உள்ள பந்தலாவில் காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது காரில் இருந்தவர்கள் தட்சிண கன்னடா மாவட்டம், புத்தூரைச் சேர்ந்த நான்கு பேர் என்பதும், ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அரசு பேருந்து மோதியதில் கார் முற்றிலும் உருக்குலைந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் அமர்ந்திருந்த பக்கமும் சேதமானது. ஆனால், அரசு பேருந்து ஓட்டுநர் காயமின்றி தப்பினார்.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 60 பயணிகளில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக சிர்சி புறக்காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours