புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் விமான சேவையை வரும் மார்ச் 31 முதல் நிறுத்தப் போவதாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மற்றும் 2015ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனம் ஆகியவை புதுச்சேரியில் இருந்து பெங்களூருவுக்கு விமான சேவையை துவங்கின. பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாததால் இச்சேவை அப்போது நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் மத்திய அரசு புதிய விமான கொள்கையை அறிவித்தது. அதன்படி உதான் திட்டத்தின் கீழ் சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்க விமான நிறுவனங்களுக்கு பாதி கட்டணத்தை, மத்திய அரசே ஏற்கும் என அறிவிப்பு வெளியிட்டது. அத்திட்டத்தில் சேர்ந்து புதுச்சேரியில் விமான சேவை மீண்டும் துவங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.
கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஐதராபாத்துக்கு விமான சேவையை துவங்கியது. இதற்கு வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, மீண்டும் பெங்களூரூவுக்கு விமான சேவையை விரிவுப்படுத்தியது. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2023 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி முதல் தினமும் ஹைதராபாத்துக்கு விமானம் இயக்கப்பட்டது. ஹைதராபாத்திலிருந்து மதியம் 12.25 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 2 மணிக்கு புதுச்சேரி வந்தடைந்தது. புதுச்சேரியிலிருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு 3.20 மணிக்கு பெங்களூரு சென்றடைந்தது. அங்கிருந்து டெல்லிக்கு இணைப்பு விமான சேவை தரப்பட்டது. இதன் மூலம் புதுச்சேரியில் இருந்து டெல்லிக்கு இரவு 11.20 மணிக்கு சென்றடைய முடிந்தது. இது மக்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.
ஆனால் இதற்கு பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் விமான சேவையை மார்ச் 31 முதல் நிறுத்த ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
+ There are no comments
Add yours