விவிபாட் வழக்கில் அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வு கிடைத்துள்ளதாக கூறியுள்ள நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், வாக்காளர் சரிபார்க்கக்கூடிய விவிபாட் இயந்திரம் வழங்கும் ஒப்புகை சீட்டுகளையும் முழுமையாக எண்ணி சரி பார்க்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் உள்ளிட்ட பலர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தீர்ப்புக்காக இந்த வழக்கு இன்று ஒத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்காக தேர்தல் ஆணைய தொழில்நுட்ப அதிகாரிகள் இன்று பிற்பகல் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு, வழக்கை மதியத்திற்கு ஒத்திவைத்தனர். மதியம், தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்கள் கூறும் போது, “கண்ட்ரோல் யூனிட், பாலட் யூனிட் மற்றும் விவிபாட் ஆகிய மூன்றும் அவற்றின் சொந்த மைக்ரோ கண்ட்ரோலர்களை கொண்டுள்ளன. இவற்றை பிசிக்கலாக அணுக முடியாது. அனைத்து மைக்ரோ கண்ட்ரோலர்களும் ஒருமுறை நிரல்படுத்தக் கூடியவை. அவற்றை மாற்ற முடியாது” என தெரிவித்தனர்.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பூஷன், ”இந்த மைக்ரோ கண்ட்ரோலர்களை உருவாக்கும் நிறுவனம் அதை மறுமுறை பயன்படுத்த முடியும் என கூறியுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என கூறுகிறது. இதனால் தான் குழப்பம் நிலவுகிறது” என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும் போது, ”ஈவிஎம், விவிபாட் இயந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கண்ட்ரோலர்கள் உள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும் பாலட் இயந்திரம், ஈவிஎம், விவிபாட் ஆகிய மூன்றும் சீல் வைக்கப்படும். 45 நாட்கள் இந்த தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46வது நாள் அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களை தொடர்பு கொண்டு தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளதா என்பது சரிபார்க்கப்படும். ஏதேனும் வழக்குகள் இருந்தால் மட்டும், சம்பந்தப்பட்ட இயந்திரங்கள் தனியாக பாதுகாத்து வைக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”தேர்தல்களில் முறைகேடு நடந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. ஒரு அரசியல் அமைப்பான நீதிமன்றம், இன்னொரு அரசியல் அமைப்பான ஆணையத்தை எப்படி கட்டுப்படுத்துவது? தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் தேர்தல் ஆணையம் கூறும் தகவல்களை ஏற்கத்தான் வேண்டும். விவிபாட் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது” என்றனர். தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் அவர்கள் தள்ளி வைத்தனர்.
+ There are no comments
Add yours