வெங்காயத்தில் உருவான ‘சாண்டா கிளாஸ்’ மணல் சிற்பம்!

Spread the love

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், 2 டன் வெங்காயம், மணலைக் கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தாவை வடிவமைத்துள்ளார்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பலரும் ‘சாண்டா கிளாஸ்’ எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, குழந்தைகள், சிறுவர்களுக்கு சாக்லேட், பரிசுப் பொருள்கள் வழங்கி ஆசிர்வதிப்பர்.

இந்நிலையில் ஒவ்வொரு முக்கிய நிகழ்வின்போதும் ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில், மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், மணற்சிற்பம் அமைத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பூரி கடற்கரையில், 2 டன் வெங்காயம் மற்றும் மணலைக் கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா மணற்சிற்பத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

இது பார்வையாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அனைவரையும் கவர்ந்து வருகிறது. கிறிஸ்துமஸ் தாத்தா வடிவமைப்பு குறித்து சுதர்சன் பட்நாயக் கூறுகையில், ”ஒவ்வொரு ஆண்டும், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, பூரி கடற்கரையில் சில வித்தியாசமான சிற்பங்களை உருவாக்க முயற்சிக்கிறோம்.

இந்த முறை வெங்காயம் மற்றும் மணலைக் காெண்டு, 100 அடி நீளம், 20 அடி உயரம் மற்றும் 40 அடி அகலம் கொண்ட உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் தாத்தாவை உருவாக்கியுள்ளோம். இதற்காக இரண்டு டன் வெங்காயம் பயன்படுத்தப்பட்டது. மேலும், ‘மரக்கன்றை பரிசளிப்பீர், பூமியை பசுமையாக்குவீர்’ என்ற செய்தியை இதன் மூலம் உலகக்கு உணர்த்துகிறோம்.

பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை நாம் அனைவரும் அறிவோம். அதிக மரக்கன்றுகளை நட வேண்டியதுதான் தற்போதைய தேவை. கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பத்தை வடிவமைத்து முடிக்க 8 மணி நேரமானது. உலகத்தினர் கிறிஸ்துமஸை கொண்டாடும் வேளையில், இந்தியாவில் வெங்காயம், மணலால் வடிவமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா சிற்பத்தை காண்பர்’’ என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours