“அமேதி தொகுதியில் தோல்வி அடைந்ததைப் போலவே வயநாடு தொகுதியிலும் தோல்வியை சந்திக்க வேண்டி இருக்கும். என்னை நம்புங்க… இப்பவே வேற தொகுதியைப் பார்த்து வெச்சுக்கோங்க…” என்று ராகுல் காந்தியை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற உள்ள மாநிலங்களில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிராவில் நாண்டேட் பகுதியில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, ”கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் தோல்வியை சந்தித்தது. இப்போது வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்கள். நான் சொல்கிறேன். இந்த முறை வயநாட்டில் தோல்வியடைந்து வேறு ஒரு தொகுதியை காங்கிரஸ் தேட வேண்டி இருக்கும்” என்றார்.
மேலும் பேசி அவர் ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் இளவரசன் என அவர் விமர்சித்தார். “ கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், அவரை (ராகுல் காந்தி) நான் கூட பயன்படுத்தாத வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். வயநாடு தொகுதியில் தேர்தல் முடிவடைந்ததும், இளவரசனுக்கு வேறு தொகுதியை காங்கிரஸ் தேட வேண்டி இருக்கும். என்னை நம்புங்க… இப்போதே போட்டியிடுவதற்கு வேறு ஒரு தொகுதியைப் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, அமேதி மற்றும் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி வயநாட்டில் வென்றிருந்தார். ஆனால் அமேதி தொகுதியில் தற்போது மத்திய அமைச்சராக உள்ள ஸ்மிருதி இராணியிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours