டேராடூன்: உத்தராகண்டில் சில்க்யாரா – பர்கோட் இடையே அமைக்கப்பட்டு வந்த 4.5 கி.மீ. தொலைவு சுரங்கப்பாதையில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 6-வது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், 100 மணி நேரத்துக்கும் அதிகமாக உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களின் உடல் மற்றும் மனநிலை குறித்த கவலை அதிகரித்துள்ளது.
கடந்த 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு சுரங்கத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இவர்களை மீட்கும் பணிகளில் 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். சுரங்கப்பாதையில் சிக்கியிருப்பவர்கள் 100 மணி நேரத்துக்கு மேலாக உள்ளே சிக்கியிருப்பதால் அவர்களின் மனம் மற்றும் உடல்நிலை குறித்த கவலை அதிகரித்துள்ளது. இதனிடையே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான, சி-130 ஜெ விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட அதிநவீன செயல்திறன் கொண்ட துளையிடும் இயந்திரம் வியாழக்கிழமை நிறுவப்பட்டது மீட்பு பணிகளில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரை இடிபாடுகளில் 21 மீட்டர்கள் வரை தோண்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்க இன்னும் 60 மீட்டர்கள் மட்டுமே தோண்டப்பட வேண்டும், அதன் பின்னர் தொழிலாளர்கள் வெளியேற 900 மில்லி மீட்டர், 800 மில்லி மீட்டர் விட்டமுள்ள குழாய்களை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளேசெலுத்த வேண்டும். இதற்கிடையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு குழாய்களின் மூலம் உணவு, தண்ணீர் மருந்து பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.தொழிலாளர்களின் மன உறுதியை தக்கவைக்கும் வகையில் தொடர்ந்து அவர்களுடன் தகவல்தொடர்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று உத்தர்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் ஆறு படுக்கைகள் கொண்ட தற்காலிக சுகாதார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் வெளியேற்றப்படும் போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுடன் 10 ஆம்புலன்ஸ்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள ஹர்பஜன் சிங், தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் தனிப்பட்ட தலையீடு வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், “உத்தராகண்ட் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கி கிட்டத்தட்ட 100 மணி நேரங்கள் கடந்து விட்டது. அத்தொழிலாளர்களின் நலனுக்காகவும் அவர்கள் விரைவாக மீட்கப்படவும் நான் இறைவனை வேண்டுகிறேன்.
நாடே விழாக்கள் மற்றும் உலகக் கோப்பைக் கொண்டாட்டத்தில் இருக்கும் போது அந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். அவர்களை மீட்க அனைத்து வழிமுறைகளையும் நாம் பயன்படுத்த வேண்டும். அந்தத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் குடும்பத்தினரின் முகங்களில் புன்னகையை பூக்கச்செய்ய மீட்பு நடவடிக்கைகளில் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஜி தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours