ஜிரிபம் (மணிப்பூர்): மணிப்பூரின் ஜிரிபம் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டரில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் கொல்லப்பட்டனர். சிஆர்பிஎஃப் முகாம் மீது நடந்த தாக்குதலை அடுத்து, இந்த துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிப்பூரில் உள்ள இம்பாலை தளமாகக் கொண்ட மைத்தேயி சமூகத்துக்கும், மலைப்பகுதிகளில் வசிக்கும் குகி சமூகத்துக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடந்த வன்முறையில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆயுதமேந்திய தீவிரவாதிகள் ஜிரிபம் மாவட்டத்தின் போரோபெக்ரா பகுதியில் அமைந்துள்ள பல கடைகளை எரித்தனர். மேலும், இம்பால் பள்ளத்தாக்கில் வயல்களில் பணிபுரியும் விவசாயிகள் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக மலைப்பகுதியை சார்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் பின்னணியில் இன்று (திங்கள்கிழமை) காலை இம்பால் கிழக்கு மாவட்டத்தில் வயலில் பணிபுரிந்துகொண்டிருந்த விவசாயி ஒருவரை, அருகில் உள்ள மலை உச்சியில் இருந்து தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கல்ள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், அந்த விவசாயி காயம் அடைந்துள்ளார். காயமடைந்த விவசாயி அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
தீவிரவாதிகளுக்கு எதிராக சிஆர்எஃப் வீரர்கள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், 11 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக மணிப்பூரின் மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பாதுகாப்புப் படையினர், ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஐஇடி வெடிபொருள்களை கைப்பற்றியதாக அசாம் ரைபிள்ஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours