கேரளா மாநிலத்தில் வருகிற 7ஆம் தேதி வரையிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..
அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கேரள மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் நீர்பிடிப்பு பகுதிகள், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மேலும், கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களில் 64 முதல் 115 மி.மீ வரை மழை பெய்துள்ளது.
மேலும், திருவனந்தபுரத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இந்நிலையில், கனமழைக்கு இதுவரை அங்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.
அதன்படி, தொடர் மழை காரணமாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காட்டூரை சேர்ந்த ஜித்தின், மலப்புரத்தை சேர்ந்த முகமது முகமில் என்ற சிறுவன், சம்பகுளத்தை சேர்ந்த வேலாயுதன் நாயர் ஆகிய 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
மழை தொடர்வதால் ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டங்களில் 5 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், திருவனந்தபுரத்தில் சோமன் என்பவர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், அவரை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனால், இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவில் வருகிற 7-ந் தேதி வரை கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மலை மற்றும் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
+ There are no comments
Add yours