வயநாட்டில் ராணுவம் அமைத்த தற்காலிக பாலம்
புதுடெல்லி: கேரளாவின் ஏஎம்எல்பி பள்ளியல் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ராயன். இவன் வயநாடு மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டதை சமூக ஊடகத்தில் வெளியான வீடியோவில் பார்த்தான். இதற்காக ராணுவத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்பிய ராயன், தனது நோட்டு புத்தக தாளை கிழித்து அதில் மலையாளத்தில் கடிதம் எழுதினான். அதில் அவன் கூறியிருப்பதாவது:
எனது அன்புக்குரிய வயநாடு மிகப் பெரிய நிலச்சரிவில் சிக்கி பேரழிவை சந்தித்தது. இங்கு ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டு இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்ட காட்சியை பார்க்கும்போது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. நீங்கள் பிஸ்கட் சாப்பிட்டு உங்கள் பசியை போக்கி பாலம் அமைத்த காட்சியை பார்த்தது என்னை நெகிழ்ச்சியடைய வைத்தது. நானும் ஒரு நாள் ராணுவத்தில் சேர்ந்து எனது நாட்டை காக்க விரும்புகிறேன். உங்களுக்கு மிகப் பெரிய சல்யூட்.
ராயன் இவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.
இந்த கடிதம் சமூக ஊடகம் மூலமாக ராணுவத்தை சென்றடைந்தது. இதற்கு தென் மண்டல ராணுவ தலைமையகம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
அன்பான ராயனே, உனது இதயப்பூர்வமான வார்த்தைகள், எங்களின் மனதை தொட்டுள்ளது. துயரம் ஏற்படும் காலங்களில், நம்பிக்கை ஒளியாக இருக்க நாங்கள் விரும்புகிறாம். உனது கடிதம் இந்த நோக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது. உன்னைப் போன்ற ஹீரோக்கள் எங்களை மிகவும் ஊக்குவிக்கின்றனர். நீ ராணுவ சீருடை அணிந்து எங்களுடன் நிற்கும் நாளுக்கு, நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். நாம் ஒன்றாக இணைந்து நமது நாட்டை பெருமையடையச் செய்யலாம். இவ்வாறு ராணுவம் பதில் அளித்துள்ளது.
+ There are no comments
Add yours