பாட்னா: பிஹார் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ‘ஜிவித்புத்ரிகா’ என அழைக்க்கப்படும் புனித நீராடல் பண்டிகையின்போது நீரில் மூழ்கி 37 குழந்தைகள், 7 பெண்கள் உட்பட 46 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பிஹாரின் கிழக்கு மற்றும் மேற்கு சம்பரான், அவுரங்காபாத், கைமூர், பக்சர், சிவன், ரோஹ்தாஸ், சரண், பாட்னா, வைஷாலி, முசாபர்பூர், சமஸ்திபூர், கோபால்கஞ்ச் மற்றும் அர்வால் ஆகிய மாவட்டங்களில் நடந்த புனித நீராடல் நிகழ்ச்சிகளின்போது 37 குழந்தைகள் உட்பட 46 பேர் உயிரிழந்தனர்.
இந்த உயிரிழப்புகளுக்கு முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார். இதுவரை 43 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக ‘ஜிவித்புத்ரிகா’ பண்டிகை கொண்டாடப்படுகிறது. குழந்தைகள், தங்கள் தாய்மார்களுடன் பல்வேறு நீர்நிலைகளில் நீராடச் சென்றபோது இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன.
ஔரங்காபாத் மாவட்டத்தில் 8 குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்தனர். கைமூரில் ஏழு சிறுவர்கள் பாபுவா மற்றும் மொஹானியா காவல் நிலையப் பகுதிகளில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கிராமப்புற பாட்னாவின் பிஹ்தா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட அம்னாபாத் கிராமத்தில் நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சரண் மாவட்டத்தில் ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
+ There are no comments
Add yours